உன் பிரிவில் உணர்ந்தேன் - கவிதை
———————————----------------------——
பேருந்தில் வர நீ நடந்து வந்தபோது
அந்தக் கம்பீரம் என்னை ஆக்கிரமித்தது
உணவு இடைவேளையில் அந்தத் தட்டில்
அலைந்த உன் விரல்கள் என்னை அலைக்கழித்தன
நீ பேசும்போது உதிர்ந்த உன் சிரிப்பலைகள்
என் உள்ளத்தை அலை பாய வைத்தன
கூட்டங்களில் நீ எடுத்துப் பேசிய வாதங்களின்
அறிவும் அடக்கமும் என்னை அள்ளிப் போயின
நண்பருடன் பேசிப் பழகும் பண்பில்
கலந்திருந்த உன் நளினம் என்னைக் கவர்ந்தது
நீ நின்ற போதும் நடந்த போதும் அமர்ந்த போதும்
ஏதோ ஒரு அழகு என்னை ஆட்டிப் போட்டது
உன்னோடு பேச விரும்பினாலும் ஏதோ ஒன்று
நீ அருகில் வந்ததும் கட்டிப் போட்டது
உன்னைப் பார்ப்பது மட்டும் போதும் என்று
பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டதும் பறி போனது
எங்கே போனாய் ஏன் போனாய்
எப்போது வருவாய் , வருவாயா ,மாட்டாயா
என் உயிர் என் கண்களின் வழி உன்னைத் தேடுவதை
உன் பிரிவில் உணர்ந்தேன்
————-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
நெகிழ்ச்சி...
பதிலளிநீக்கு