ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

பேசும் குழந்தை - சிறுகதை

 பேசும் குழந்தை - சிறுகதை 

——————----------------------------——-

பல வருடக் காத்திருப்பிற்குப் பின் சேகரும் நளினியும் முடிவு செய்தனர் . குழந்தைகள் காப்பகம் சென்று , பிறந்து ஒன்றிரெண்டு மாதங்களே ஆன குழந்தைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மகவாக்கிக் கொள்வது என்று . அதில் நளினி போட்ட ஒரு கண்டிஷன் தான் சேகருக்குச் சிரிப்பை வரவழைத்தது .


‘நான் தூக்கியவுடன் எந்தக் குழந்தை ‘நீதான் என் அம்மா ‘ என்று சொல்கிறதோ அதுதான் நாம் மகவாக்கிக் கொள்ளப் போகும் குழந்தை , அது ஆணோ பெண்ணோ அதைப் பற்றிக் கவலை இல்லை ‘ என்றாள் .


‘அது எப்படிம்மா ஒன்றிரெண்டு மாதங்களே ஆன குழந்தை பேசும் ‘ என்றதற்கு ‘ அப்படித்தான்  , அது பேசும் , எனக்குக் கேட்கும் ‘ என்று சொல்லி விட்டாள் . இப்படித்தான் , நளினி பிடிவாதக்காரி என்பது சேகருக்குத் தெரியும் . அவளிடம் தனக்குப் பிடித்ததே அந்தப் பிடிவாதம் தான் என்று சில நெருக்கமான தருணங்களில் அவன் அவளிடம் உளறிய ஞாபகம் வந்து புன்னகைத்தான் .


புரிந்து கொண்ட நளினி , ‘ ம் , இது நம்ம குழந்தையைத் தேர்ந்தெடுக்கும் நேரம் , வேற எந்த மூடுக்கும் நீங்களும் போக வேண்டாம் , என்னையும் போக வைக்க வேண்டாம் ‘ என்று குறும்பாக எச்சரிக்க , இருவரும் அந்தக் குழந்தைகள் காப்பகத்தில் நுழைந்தனர் .


ஏற்கனவே சொல்லி வைத்திருந்தபடி , அந்தக் காப்பகத் தலைவியால் ஏற்பாடு செய்த படி  வரிசையாகப் பல தொட்டில்களில் ஒன்றிரெண்டு மாதங்களே ஆன பல குழந்தைகள் . ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தாள் . சில சிரித்தன . சில அழுதன . சில மழலைச் சப்தம் எழுப்பின . திருப்தி இன்றி ஒவ்வொன்றாகத் தொட்டிலில் திரும்பிக் கிடத்தி விட்டு , அந்தக் குழந்தையைக் கையில் ஏந்தினாள் .


அந்தக் குழந்தை ஒரு நிமிடம் சிலிர்த்தது .அவளை உற்றுப் பார்த்தது . நினைத்தது .


‘இந்தக் கைகளின் மென்மையான கதகதப்பு எவ்வளவு இன்பமாக இருக்கிறது , இவள் முகத்தின் அழகு எனக்குள் ஊடுருவிச் சென்று ஏதோ ஒரு அமைதியைக் கொடுக்கிறதே . இவள் மடியில் படுத்து அழ வேண்டும் என்று தோன்றுகிறதே . சிறிது நேரத்தில் சிரிக்க வேண்டும் என்று தோன்றுகிறதே , இவள் தோளில் படுத்துத்  தூங்க வேண்டும் என்று தோன்றுகிறதே . இவள் கன்னத்தோடு  கன்னம் வைத்து இழைய வேண்டும் என்று தோன்றுகிறதே . இவள் அருகில் படுத்து இவள் அணைப்பில் நிம்மதி காண வேண்டும் என்று தோன்றுகிறதே . ‘


அந்தக் குழந்தை  நினைக்க நினைக்க அதன் இதழ்கள் விரிந்த போது நளினியின் இதயத்தில் ‘ அம்மா' என்ற ஓசை இசையாக இறங்கியது .


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...