திங்கள், 24 ஏப்ரல், 2023

கொங்கணி மொழிச் சிறுகதை மதிப்புரை - நவீன விருட்சம் நிகழ்வு

 கொங்கணி மொழிச்   சிறுகதை மதிப்புரை  - நவீன விருட்சம் நிகழ்வு 

--------------------------------------------------------------------------------------------------

ஹேமாச்சார்யா  அவர்களின் கொங்கணி மொழிக் கதையான சுமதி கதையில் ஒரு முதியவருக்கும்  சிறுமிக்கும் இடையே ஏற்படும் தாத்தா பேத்தி  உறவில் வெளிப்படும் இரக்கம் கலந்த அன்பை உருக்கமாக எழுத்தில் வடித்துள்ளார்.

 அந்த மெயின் கதை பிளாஷ் பேக்கில் வருகிறது.

 ஆரம்பத்தில் ஆசுபத்திரியில் தனது முற்றிய கான்சர் வியாதிக்கு டிரீட்மெண்ட் எடுத்துக் கொண்டு இருக்கும் அந்த முதியவருக்கு மருந்து கொடுக்கும் நர்ஸ் ' உங்க பேத்தி உங்களுக்கு ஊசி மருந்து  கொண்டு வந்திருக்கேன் ' என்றபடி அவருக்கு ஊசி போடும் போது  அவர் நினைவு பின்னோக்கிப் போகிறது.  என்ன இருந்தாலும் அந்த சுமதிப் பேத்தி போல் வருமா என்று நினைக்கிறார்.  அவர் கண்கள் குளமாகின்றன  இன்று போல் அதுவும் கிறிஸ்துமஸ்ஸுக்கு ஒரு வாரம் முன்பு தான். .

அந்த முதியவரும் சுமதி என்ற சிறுமியும்  சந்தித்த  முதல் காட்சியை  இப்படி அந்த முதியவரின் பார்வையில்  வருணிக்கிறார் ஆசிரியர்.

----------

கள்ளம் கபடம் அற்ற ஒரு சின்னக் குழந்தை ஒரு முதியோர் படுக்கையில் கிடந்த இந்த வயோதிகனைத் தாண்டிச் சென்றவள் என்னைக் கண்டு என் அருகே வந்தாள் .

'தாத்தா உங்களுக்கு என்ன பண்ணுது , காய்ச்சலா இருமலா'

'முதுமை காரணமான சுகவீனம்'

'அப்படியா ,' என்மீது கருணையோடு அவள் கூறினாள் .

புன்முறுவல் தவழும் முகம் .

என் கையைப் பற்றிக்கொண்டு அவள் கூறினாள்

'தாத்தா , உங்களுக்காக நான் பிரார்த்தனை பண்ணுவேன். இயேசு பிரான் உங்களுக்கு விரைவில் சுகம் தருவார். '

'குழந்தாய் , என்னுடைய இந்த நோய் அவ்வளவு எளிதில் குணமாகும் நோய் இல்லையம்மா '

'ஓகே' என்றாள்  அவள். வேறு என்ன சொல்வதென்று தெரியாமல்.

'தாத்தா நான் போகட்டுமா. , நாளைக்கு சாயந்தரமும் உங்களைப் பார்க்க வருவேன்'  என்று கூறிக் கொண்டே அழகும் கனிந்த நோக்கும் உள்ள மான் குட்டி போல் துள்ளிக் கொண்டே வண்ணத்துப் பூச்சி போல் பறந்து ஓடினாள் அவள். மயிலைப் போன்ற அவள் நடையழகைக் கண் கொட்டாது பார்த்துக் கொண்டே இருந்தேன் நான்.

---------------

மறுநாள் இவர் சுமதிக்காகக் காத்திருந்தார் . வந்து அன்பாகப் பேசினாள் .

'தாத்தா நீங்க ஏதோ கவலையா இருக்கீங்க . அப்படித்தானே, உங்க உடம்புக்கு என்ன தாத்தா , என்ன வியாதி உங்களுக்கு '

இவர் மௌனமாக  இருந்தார்.  . அவர் கேன்சர் நோயைப் பத்திச் சொல்லி அவளோட மனசைக் கஷ்டப்படுத்த வேணாம்னு சும்மா இருந்தார் ..

'என்கிட்டே சொல்ல மாட்டீங்களா தாத்தா , நான் ஒருத்தர் கிட்டேயும் சொல்ல மாட்டேன் தாத்தா ' என்றவள்

பிறகு அவரைத் தொல்லைப்படுத்தக் கூடாதுன்னு பேச்சை மாத்திட்டாள்.

'தாத்தா, நேத்து ராத்திரி நாங்கள்லாம் சேர்ந்து கூட்டமா பிரார்த்தனை பண்ணினோம். உங்களுக்கு சீக்கிரம் குணமாகணும்னு  நான் வேண்டிக்கிட்டேன் . நீங்க சீக்கிரம் நல்லாயிடுவீங்க தாத்தா . உங்களுக்குச் சுகமான பிறகு உங்க கையைப் பிடிச்சு நான் உங்களை எங்களோட கன்னி மடத்திற்கு கூட்டிட்டுப் போவேன் .

 'கன்னி மடமா '

இவர் அதிர்ச்சியோடு அவளைப் பார்க்கிறார்.

தேவதை போன்ற இந்தக் குழந்தை அநாதை, கன்னி மடத்து அநாதை விடுதியில் இருக்காங்கிறதை அவராலே நம்ப முடியலை. ஆழ்ந்த துயரத்தோடு அவளையே பார்க்கிறார்.

அவ வெட்கத்தோடு தலையைத் தாழ்த்திக்கிட்டு .

'தாத்தா ,ஏன்  என்னை அப்படிப் பார்க்கிறீங்க' 

'செல்லக்குட்டி, நீ எங்கேம்மா தங்கியிருக்கே , உன்னோட அப்பா, அம்மா '

'இல்லை தாத்தா , நான் ஒரு அதிர்ஷடக் கட்டை. எனக்கு அப்பா அம்மாவும் இல்லை . ஒருத்தரும் இல்லை. நான் ஒரு அநாதை தாத்தா . நான் கன்னி மாடத்திலே இருக்கேன். '

அவள் குரல் தளர்ந்தது . கண்களில் நீர் முட்டியது .

இவர் படுக்கையிலே இருந்து எழுந்து அவளைத்  தழுவிக் கொண்டு

'நீ அநாதை இல்லே செல்லமே , இன்னையிலே இருந்து நீ என் பேத்தி , நான் உன் தாத்தா ' .

சுமதியின் கண்களிலும் கண்ணீர். மகிழ்ச்சியும் மனச்சுமையும் கலந்த கண்ணீர்.

முத்துக்களை போல் ஒளி வீசின அந்த கண்ணீர்த் துளிகள்.

 பிறகு தினசரி மாலையில் வந்தாள் சுமதி. கன்னி மாடத்தில் எப்படி ஒருத்தரை ஒருத்தர் கலாட்டா பண்ணுவாங்கன்னு சொல்லி இவரைச் சந்தோஷப்படுத்துவாள். இவருடைய வேதனை கணிசமா குறைஞ்சிடுத்து. இவளுடைய வருகைக்காகக்  காத்திருப்பார். அவ திரும்பிப் போனதும் இவரைத் தனிமை சூழ்ந்திடும். பிரார்த்தனையைத் தொடங்கிடுவார்.

ஒரு நாள் அவள் வரலை. மறுநாளும் அவள் வரலை. இவருக்குப் பயமாய் போச்சு. அவளுக்கு என்ன ஆச்சுன்னு துடிச்சுப் போயி ஆஸ்பத்திரி வாசலில் போய்  உட்கார்ந்து ரோட்டையே பார்த்துக்கிட்டு இருந்தாரு . பிரார்த்தனை பண்ணாரு.

' . ஆண்டவனே , என் பேத்தியை  பாதுகாப்பாயாக  , என்னை அனாதையாக்கிடாதே ' .

அப்ப  வர்றாள் சுமதி, கூடவே அந்தக் கன்னி மாடத் தலைவியும் .

அந்தத் தலைவி சொல்கிறாள் சுமதி பற்றிய விபரங்களை .

சுமதி திருமணமாகாத ஒரு கன்னித் தாயின் மகள் . ஒரு நாள் விடியலின் போது ஒன்பது மாதக் குழந்தையாகிய அவளைக் கன்னி மாடத்தின் படிக்கட்டுகளில் கை விட்டுவிட்டுப் போய் விட்டாள் அவள் தாய். அன்றிலிருந்து கன்னி மடப் பெண் துறவிகள் அனைவரும் கன்னி மடத்தின் அனாதைக் குழந்தைகளில் ஒன்றாய்ப் பொறுப்பெடுத்துக் கொண்டு  அவளை அன்போடு நடத்தி வந்தனர்.

சுமதியின் துரதிருஷ்டம் அவள் பிறப்போடு மட்டும் நின்று விடவில்லை. மூன்று வருடங்களாகத் தீவீர ஆஸ்த்மா நோயால் அவதிப்  பட்டுக் கொண்டு இருக்கிறாள். பகலில் பள்ளிக்கூடம். விளையாட்டு. இரவு வந்து விட்டால் இருமல் வந்து விடும். ரெண்டு நாட்களா தீவீர ஆஸ்த்மாவால்  கஷ்டப்பட்ட தாலே வரலே அவள் '

 அவர்கள் போனவுடன் சுமதி சொன்னாள் .

'தாத்தா , எனக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன். நாம் இருவருமே நோயாளிகள்' .

அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள் . ஆனால் அவரால் சிரிக்க முடியவில்லை.

 இவருடைய சொந்த மகனே ஆஸ்த்மாவால் தான் இறந்து போனான். அதைத் தொடர்ந்து மனைவியும் இறந்து போக , உற்றார் உறவினர் வேறு யாரும் இல்லாததால் தன்  சொத்து முழுவதும் இந்த ஆஸ்பத்திரிக்கு எழுதி வைத்து விட்டு இங்கு வந்து இருக்கிறார். இவரது கான்சர்  நோய் தீவிரம் அடைகிறது. தனிமை அழுத்துகிறது. துணையாக வந்த சுமதியின் நிலைமையும் இப்படி .

அதன் பின் சுமதியின்  நோயின் தீவிரம் குறைய, தினசரி வந்து போனாள் . ஒரு நாள் கோபமாக வந்தாள் .

'தாத்தா, என்னோட மடத்து சிஸ்டர்ஸ்க்கு ஏன் பணம் அனுப்பினீங்க. உங்க சொந்த செலவுக்கே உங்க கிட்டே பணம் இல்லையே , நீங்க வேலைக்கும் போறதில்லை. சொல்லுங்க தாத்தா , நீங்க வேலை பார்க்கிறீங்களா '

இவர் அன்பளிப்பாக  ரெண்டாயிரம் ரூபாய் அனுப்பியதை அந்த மடத் தலைவி இவ கிட்டே சொல்லிட்டாங்க.

அவள் தலையைத் தடவிக்கிட்டே சொன்னாரு.

'எனக்குப் பணம் தேவையில்லம்மா, செல்லக்குட்டி, என்னோட தேவையெல்லாம் நல்ல ஆரோக்கியமும் , சந்தோஷமான குடும்ப வாழ்க்கையும்தான். அந்த சந்தோஷத்தை நீ தந்துட்டேம்மா. பேத்திக்கு உதவி செய்யறது தாத்தாவோட கடமையில்லையா , இதுகூடச் செய்யலேன்னா , தாத்தான்னு சொல்லிக்கிறதிலே என்ன அர்த்தம் இருக்கும். '

கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டுச் சொன்னாள்.

'தாத்தா, கிறிஸ்துமஸ்ஸுக்கு  உங்க அறையிலே நான் மாட்டுத் தொழுவம் பண்ணட்டுமா '

'திருவிழா அன்னிக்கு நாம கூட்டுப் பிரார்த்தனை போவோம் தாத்தா. நான் உங்க கையைப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போறேன். '

 மறுநாள் ஓடி வந்தவ கேட்டா

'உன் தாத்தாவுக்கு என்ன நோயின்னு சிஸ்டர்ஸ் கேட்டாங்க. உங்களுக்கு என்ன நோய் தாத்தா '.

'இது முதியவர்களுக்கு வர்ற நோய்மா '

'தாத்தா .  நீங்க மறைக்கிறீங்க எனக்குத் தெரியும்,. '

என்று சொல்லி விட்டு அவர் அறையில் தொழுவம் அமைக்கிறாள். அவரும் உதவி செய்கிறார். குழந்தை ஏசுவின் திருவுருவச் சிலையும் கொண்டு வந்தாள் .

'.நாளைக்கு பிரார்த்தனைக்குப் போறப்ப, உங்களுக்கு என்ன வியாதின்னு சொல்லணும் சரியா ; பிரார்த்தனை முடிந்து திரும்பி வந்ததும் குழந்தை ஏசுவின் சிலையைத் தொழுவத்தில் வைக்கலாம் , சரியா  '

 என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டுச் செல்கிறாள்.

'சரிம்மா 'என்றவுடன் அவரைக் கட்டிப் பிடித்து , 'தாத்தா நீங்க எவ்வளவு நல்ல தாத்தா 'என்று சொல்லி குட்  நைட் சொல்லிப் போகிறாள்.

மறுநாள்  ,  இவர் புது உடை எல்லாம் போட்டுக்கிட்டு தயாரா இருக்காரு.

ஆனால்  அவள் வரவில்லை .

மடத்து அன்னை வந்தாள் .

'சுமதி எங்கே .'

'அவள் ஆஸ்த்மா ரெம்ப மோசமாகி , இயேசு பிரான் , உங்கள் பேத்தியைத் தன அணைப்புக்குள் அணைத்துக் கொண்டார். '

 'மூன்று வருடங்களாகக் கான்சர் நோயால் வருந்தும் தன்னை விட்டு விட்டு அந்தச் சின்னஞ் சிறு பேத்தியை எடுத்துக் கொண்டானே இறைவன் ' என்று கண்ணீர் கொட்டுகிறது அவருக்கு  .பெற்ற  தாயாரால் கை விடப்பட்ட குழந்தை போல் அவர் அழறாரு.

;'தைரியமா இருங்க தாத்தா , சொர்க்கத்திலிருந்து உங்களுக்கு அவள் விமோச்சனத்தைப் பெற்றுத் தருவாள் .

'கடைசி மூச்சின் போது  கூட தாத்தா தாத்தா என்று தான் சொல்லிக் கொண்டு இருந்தாள்'   என்று சொல்லிவிட்டு திருமடத் தலைவி சென்று விட்டாள் .

சுமதி தயார் பண்ணியிருந்த அந்த தொழுவத்தைப் பார்க்கிறார். குழந்தை ஏசுவின் சிலையைக் கொண்டு வந்து அங்கே வச்சு பிரார்த்தனை செய்யறாரு.

'குழந்தை ஏசுவே, உங்கள் பிறப்புக்காக சுமதி கஷ்டப்பட்டு  இந்தத் தொழுவத்தை தயார் செஞ்சா , உங்க பிறப்போட  சந்தோஷத்தை, நாங்க  இருவரும் சேர்ந்து அனுபவிக்க விடாம செஞ்சுட்டீங்க, அவளுக்கு உம்  உலகில் நிரந்தர நிம்மதியைத் தருவீராக ';

சுமதியின் இறுதிச் சடங்கிலே ஆயிரம் பேருக்கு மேலே கலந்துக்கிட்டாங்க. அதிலே அவளுக்கு மிக நெருக்கமானவர் இவர் ஒருத்தர் மட்டும்தான்.

இப்போ பிளாஷ் பாக்  முடியுது

----------------------------

 ஊசி போட்டுக்கிட்டே அந்த செவிலி சொல்றாள்.

'உங்களுக்கு ஒரு சந்தோச செய்தி. டாக்டர் சொன்னாரு.

உங்க ரத்தம் சுத்தம் ஆயிடுச்சு. உங்களுக்கு கான்சர் நோய் குணமாயிடுச்சு '

'சிஸ்டர், எல்லாம் சுமதியோட பிரார்தனையினால் தான் ' என்று உருகினார் தாத்தா.

; ஓ, சுமதியை நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா, சுமதி இடத்திலே நான் உங்க பேத்தியா  வர முடியாதா தாத்தா ' அந்த செவிலியின் முகத்தை உற்றுப் பார்த்தார். அவர் மனம்  அசை போட்டது . '

'அது போன்ற தூய்மையான அன்பை யாரால் எனக்குத் தர இயலும் . சுமதியைப் போல '

 நன்றி வணக்கம்.

---------------------நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...