வெள்ளி, 3 மார்ச், 2023

உடைந்த படகு - கவிதை

  உடைந்த படகு - கவிதை 

------------------------------------------

 கண்ணுக்குள் மீன் பிடித்த காலம் விட்டு 

கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் நேரம் 


ஆழக் கடலின் அபாயம் தெரிந்ததால் 

அவளின் கண்களுக்குள் கடல் 


கட்டி அணைத்த ஆதரவுக்  கைகளை 

விட்டு விலகிட  விருப்பம் இல்லை தான் 


வாழ்வுக்கும் வசதிக்கும் தேவைப்  பணத்தைத்  

தேடிச் செல்லும் வாழ்க்கைப்  பயணம் 


நடுக்கடலில் விரித்த வலைக்குள் 

விழுந்து துடிக்கும் அவள் விழிகள் 


வானத்து நிறத்தை வாங்கிச் சிரிக்கும் 

கடலின் வயிற்றுக்குள் ஆழப்  பசி 


அந்த வெடிப்புக்குள் இரையாய் மாறி 

உள்ளே இறங்கும் உடைந்த படகுகள் 


பழுப்புக் கட்டைகளோடு சேர்ந்து போகும்  

பரிதாபக்  காதல் நினைவுகளும் தான் 


கடற்கரை ஓரம் கையில் குழந்தையோடு 

காத்து நிற்கும் கண்ணீர்த்  துளிகள் 


குழந்தையின் உற்சாகப்  பார்வை மட்டும் 

கவிழ்ந்து கிடக்கும் உடைந்த படகுகள் மீது 

-------------------------------நாகேந்திர பாரதி

My Poems in Tamil and English 


3 கருத்துகள்:

அணிலின் திகைப்பு - குறுங்கதை

 அணிலின் திகைப்பு - குறுங்கதை  ————————-----------------------------——- அந்த அணில் திகைப்போடு இங்கும் அங்கும் பார்த்தது . ‘என்ன ஆனது இங்கிரு...