புதன், 25 ஜனவரி, 2017

சக்கரைப் பொங்கல் - நகைச்சுவைக் கட்டுரை

சக்கரைப் பொங்கல் - நகைச்சுவைக் கட்டுரை
--------------------------------------------------------------------------------------------------------------------
தை முதல் நாள் தமிழர் பண்டிகைக்கு கோலம் போடுறதில் இருந்து  பொங்கல் வச்சு சாமி கும்பிடறது வரைக்கும் பெண்களுக்கு மட்டும்தான் ரெம்ப வேலைன்னு அலட்டிக்க கூடாதுங்க. நாங்க ஆண்களும்தான் ரெம்ப வேலை பாக்கிறோம் . கோலப் பொடியில் இருந்து பொங்கல் சாமான் , பூஜை சாமான் எல்லாம் போயிப் போயி வாங்கி வர்றது யாரு. நாங்கதானே.

அதுவும் இந்த சக்கரைப் பொங்கலுக்காக ஒரு லிஸ்ட் கொடுப்பாங்க பாருங்க. பச்சரிசி, வெல்லம், ஏலம் , முந்திரி, பருப்புன்னு  அதை எல்லாமே ஒண்ணொண்ணா பாத்து வாங்கி மூணு மாடி மூச்சு இறைக்க படி ஏறி வீட்டுக்குள் நுழைஞ்சா பைக்குள் இருந்து எடுத்து வச்சுக்கிட்டு சொல்லுவாங்க பாருங்க. ''ஏங்க , பொங்கலுக்கு பாசிப் பருப்போ கடலைப் பருப்போ வாங்கி வரச் சொன்னா துவரம் பருப்பை வாங்கிட்டு வந்திருக்கீங்க'.  நமக்கு என்னங்க தெரியும். தெளிவா பாசிப் பருப்புன்னு எழுதி இருக்கலாம்ல. கடையிலே எவ்வளவோ பருப்பு இருக்கு. உளுந்தம் பருப்பைக் கூட வாங்கி  வந்திருப்பேன். துவரம் பருப்பு வச்சு சாம்பார் வைக்கலாம்லே. இப்படியா பேசுறது.

சரி ன்னுட்டு மறுபடி கடைக்குப் போயி  பாசிப் பருப்பு வாங்கிட்டு படி ஏறி வீட்டுக்குள் நுழைஞ்சா ' சாரிங்க, முக்கியமா ஒண்ணை மறந்துட்டேங்க. முத்தின தேங்காயா ஒண்ணு வாங்கி வாங்க. தேங்காய்ச் சில்லு நறுக்கிப் போட்டா பொங்கல் இன்னும் ருசியா இருக்கும். ' சரி நல்ல ருசியான பொங்கல் கிடைக்கப் போகுதுன்னு மறுபடி போயி வாங்கி வருவோம், மூச்சு வாங்கிக்கிட்டே .

எல்லாம் வாங்கி வந்து கொடுத்தாச்சுங்க. அப்புறமும் சும்மா விடுவாங்களா. 'ஏங்க, இந்த தேங்காயை உடைச்சு சில்லு போட்டு  கொடுங்கநாம சில்லு போட்டுக் கொடுத்தவுடன் சொல்லுவாங்க . ' இவ்வளவு பெரிய சில்லு கடிச்சு சாப்பிடறதுக்கா. பொடி பொடியா நறுக்கிக் கொடுங்க,' கொடுத்திட்டு பொங்கல் சாப்பிட ஆசையா காத்துக்கிட்டு   இருப்போம்.

பொங்கல் பொங்கி இறக்கி வைச்சு சாமிக்கு முன்னாலே இலையில் படைக்கிறப்போ பாக்க பாக்க நாக்கிலே எச்சில் ஊறும். நெய், ஏலம் வாசனையோடு, முந்திரி, தேங்காய் சில்லு மிதக்க தள தளன்னு  மின்னும் பொங்கல். பூஜை முடிஞ்சு நம்ம இலைக்கு முன்னாலே உடகார்ந்தா நம்ம இலையில் வந்து விழும், ஒரு டீ ஸ்பூன் பொங்கல்

 'என்னம்மா இது ஒரே ஒரு ஸ்பூன்' . ன்னு கேட்டா பதில் வரும் . 'ரத்தத்தில் சக்கரை அளவு இருநூறுக்கு மேலே வச்சிக்கிட்டு, இதுக்கு மேலே கேட்கிறீங்களா, இந்த ஒரு ஸ்பூன் பொங்கலே ஜாஸ்தி உங்களுக்குஎன்ன பண்றது சொல்லுங்க.
----------------------------------------------------------நாகேந்திர பாரதி


7 கருத்துகள்:

 1. அங்கேயும் இதே நிலையா...?!!!!!

  அடியேன் 20 வருடமாக இனிப்பானவன்...

  பதிலளிநீக்கு
 2. அடடா... இவ்வளவு வேலை செய்த பின் ஒரு ஸ்பூன் சர்க்கரை பொங்கல் தானா... :(

  பதிலளிநீக்கு
 3. ஆசை காட்டி ஏமாற்றியது போலுள்ளது.

  பதிலளிநீக்கு
 4. ஹஹ்ஹஹஹ் அப்படித்தாங்க சர்க்கரை வியாதி உள்ளவங்க நிலைமை!!!

  பதிலளிநீக்கு