ஞாயிறு, 12 ஜூன், 2016

மனித உரிமை

மனித உரிமை
-------------------------
          இந்த நபரை நீங்களும் பார்த்திருக்கலாம். நாங்கள் நண்பர்கள் பூங்காவில் ' எழுத்தாளர் உரிமை' பற்றி விவாதித்துக் கொண்டு   இருந்தபோது திடீரெனத் தோன்றிய இவர்       நண்பர் சாமியைப் பார்த்து
' என்னடா சாமி இப்படி இளைச்சுப் போயிட்டே     ?    சுகர் பி பி எதுவும் இருக்கா ' என்றார்.                                                                                                                                                                                                                                                                             
                     'இல்லே' என்று பயந்தபடி கூறிய சாமியிடம் ' அம்பது வயசுக்கு மேலே ஆயிட்டா எதாவது வந்துடும்டா. உடனே போயி புல் செக் அப் ஒண்ணு பண்ணிக்கோ ' என்றவர் எங்கள் பக்கம் திரும்பி ' சாமியும் நானும்        ஸ்கூல் பிரெண்ட்ஸ் . அப்பறமும் ஒரே ஆபீசிலே வேலை பார்த்துட்டு          நான் வெளியூர் போயிட்டேன். ஒரு வருஷம் ஆச்சு பார்த்து. அப்பல்லாம் எப்படி இருப்பான் தெரியுமா சாமி. அதுவும் பள்ளிக்கூட நாட்களிலே  எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் முதல் ஆளா பேர் கொடுத்துவிடுவான் . ஆனா போட்டியிலே கலந்துக்கிட்டு கடைசி ஆளாய்தான் வருவான். அந்த ஆர்வம் . அதைத்தான் சார் பார்க்கணும்என்றார்.

        கொஞ்ச நேரம் சாமியையே உற்றுப் பார்த்தார். சாமி சங்கடத்தோடு நெளிந்தார். ' என்னடா இது. கண்ணுக்குக் கீழே கருப்பு கருப்பா'. உனக்கு என்னமோ பிரச்சினை இருக்குடா. என்னா சார் நீங்க . இதையெல்லாம் பார்க்க மாட்டீங்களா. ஒரு மணி நேரம் உட்கார்ந்து அரட்டை அடிச்சுட்டு போயிடுவீங்க. நானும் சாமியும் அப்படியா சார்'.

              ' சாமி ஞாபகம் இருக்கா . அந்த கோமள விலாஸ் ஹோட்டல். ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்திலே . எங்களுக்கெல்லாம் போண்டா காப்பி வாங்கிக் கொடுப்பியே. அதை மூடிட்டாங்கலாம்டா .' என்று அதற்காக ஒரு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தினார்.

               'மறக்க முடியுமாடா. நீ வாங்கிக் கொடுத்த காப்பியிலே வளர்ந்த உடம்புடா இது. ' என்றபடி  தன் உடம்பை ஒரு நிமிஷம் பார்த்தவர் ' என்ன இப்ப கொஞ்சம் மெலிஞ்சுட்டென் அவ்வளவுதான்'.

             'சரி சரி வா. பக்கத்திலேயேதான்   இருக்கு  பி சி டி  ஆஸ்பத்திரி. அங்கே தலை முதல் பாதம் வரை சோதனை பண்ணி , ரத்தம், சிறுநீர் எல்லாம் செக் பண்ணி எப்படியாவது உனக்கு இருக்கிற ஒண்ணு ரெண்டு வியாதிகளை கண்டு  பிடிச்சுடுவாங்க. வாடா' என்று நம்பிக்கை அளித்தபடி அவர் கையைப் பிடித்து இழுக்க, சாமியும் அவரைப்  பின் தொடர்ந்த படி எங்களை பரிதாபமாக  திரும்பிப் பார்த்தபடி சென்றார்.

        எங்களது விவாதமும் இப்போது 'எழுத்தாளர் உரிமை' யில் இருந்து மாறி ' தனி மனித உரிமை' என்று   சாமியின் உரிமைகளைப் பற்றி கார சாரமாக ஆரம்பித்தது.

------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

          
                                                                                 


3 கருத்துகள்: