செவ்வாய், 12 ஜனவரி, 2016

ரெயில் பிரயாணம்

ரெயில் பிரயாணம் 

பிரயாணத்தின் போது கொஞ்சமா லக்கேஜ் கொண்டு போறது சவுகரியம்னு சொல்லுவாங்க. ஆனா சில பேரு அது மத்தவங்களுக்குத் தான் சொல்லியிருக்கிறதா நினைச்சிக்கிட்டு ஏதோ வீட்டையே காலி பண்ணிட்டுப் போற மாதிரி லக்கேஜ்களை தூக்கிட்டு வருவாங்க.

ரயில்லே கொடுக்கிற படுக்கை எல்லாம் இவங்களுக்கு ஒத்துக்காதாம். மெத்தை தலையணை அது ஒரு தனி  லக்கேஜ் . அது தவிர சாப்பாட்டு மூட்டை . ஒரு ராத்திரிப் பிரயாணத்திலே எவ்வளவுங்க சாப்பிட முடியும். புளியோதரை, தயிர் சாதம், பொங்கல் வடை ன்னு அது ஒரு தனி மூட்டை இருக்கும்ஒரு ராத்திரியிலே புள்ளைங்க பசியிலே துடிச்சுப் போயிடுமாம். இது தவிர ரயில்வே ஸ்டேஷன்னிலே  வாங்கிற பழம், பிஸ்கட், தண்ணீர் ன்னு அது ஒரு தனி லக்கேஜ் .
இவங்க போற இடத்திலே எந்தப் புண்ணியவான் வீட்டிலே தங்குவாங்களோ     தெரியலை அவங்களை ஒரு வாரத்துக்காவது படுத்துற மாதிரி துணிமணிப் பெட்டிகள்   இருக்கும். அந்தப் பெட்டிகளை எல்லாம் ரெயில் பெட்டி வாசல் வழி இவங்க ஏத்து றப்போ ரெம்ப நேரத்துக்கு வேற யாரும் உள்ளே ஏற முடியாது. வண்டி கிளம்பப் போகுதுன்னு பின்னாலே இருக்கிறவங்க அவசரப் படுத்தினாலும், 'அடுத்த பெட்டி வழியா ஏறி வர வேண்டியது தானே. அதுக்குத் தானே உள்ளே வழி வச்சிருக்காங்க ' என்று கடுப்பேத்துவார்கள்.    

உள்ளே வந்தப்புறம், நம்மளை மாதிரி ஒரே ஒரு பெட்டியை உள்ளே தள்ளி விட்டுட்டு  ஓரமா உட்கார்ந்து இருக்கிறவங்களைப் பார்த்து ஒரு முறைப்பு முறைப்பாங்க. 'அந்தப் பெட்டியை நிமித்தி ஒரு ஓரமா வைங்க. எங்க லக்கேஜ் எல்லாம் உள்ளே தள்ள ணும்ல     '   என்று அதிகாரம் செய்வார்கள். நம்ம பெட்டியை ஓரமா ஒதுக்கி வைக்க அது நம்மளை மாதிரியே ஓரமா நசுங்கி போயி நிக்கும்..

இவங்க பசங்க நம்மளைப் போட்டு நசுக்கிகிட்டு இருப்பாங்க. இந்த அடாவடிப் பேச்செல்லாம் கொஞ்ச நேரத்துக்குத் தான். அப்புறம் நம்மை ரெம்ப அன்போடு பாப்பாங்க. 'தம்பி எது வரை போறீங்க. மதுரைக்கா. நாங்களும் மதுரைதான். என்ன கடைசி நேரத்திலே கிளம்பினதாலே , பசங்களுக்கு அப்பர் பெர்த் கிடைச்சிடுச்சு. உங்களுக்கு லோயர் பெர்த்தா' ன்னு நூல் விடுவாங்க.

ஆஹா, நம்ம மூணு மாசம் முன்னேலேயே பாத்து பாத்து  பண்ணின லோயர் பெர்த்துக்கு ஆபத்து வரப் போறதுன்னு புரிஞ்சு போயிரும். 'எனக்குக் கொஞ்சம் முழங்கால் வலின்னு' சொன்னா போதும். அவ்வளவுதான். பாய ஆரம்பிச்சுடுவாங்க.  ' இந்தச் சின்னப் புள்ளைங்களைப் பாருங்க. அதுங்க எப்படி மேலே போய் படுக்கும். புரண்டு கீழே விழுந்துட்டா என்ன பண்றது. நீங்க கொஞ்சம் கஷ்டப்பட்டு மேலே ஏறிட்டா அப்புறம் மதுரை வந்தப்புறம் தானே எழும்பப் போறீங்க'

நம்ம 'ஏங்க பாத் ரூம் போறதுக்கு இறங்க வேணாமா' ன்னு சொன்னாப் போதும் . 'என்னங்க, இப்பத் தானே முழங்கால் வலின்னு சொன்னிங்க. அதோட ஏன் இறங்கணும். கொஞ்சம் பொறுத்துக் கிட்டா காலையிலே மதுரை வரப் போறது' என்று நமக்கு புத்திமதி சொல்வார்கள்.

நம்ம சவுகரியத்தைப் பத்தி  கொஞ்சம் கூட கவலைப் படாம, பசங்களை  ' நல்லா சவுகரியமா  உட்காருங்கடா' ன்னு சொல்லிட்டு நம்மளை இன்னும் கொஞ்சம்    தள்ளிக்கச் சொல்லுவாங்க. பசங்க நம்மளை ஓரத்திலே தள்ளிடுவாங்க. 'ஏங்க முழங்கால் வலின்னு சொன்னீங்க. மேலே போயி படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே' ன்னு சொல்லி நம்மளை மேலே ஏத்தி விட்டுடுவாங்க.

காலையிலே இறங்கிறப்போ   பாத்தா நம்ம பெட்டியையும் அவங்க பெட்டியோட சேத்து  அவங்க லக்கேஜ் மாதிரி இறக்கி வச்சிருப்பாங்க . நம்ம அதைப் பிரிச்சு எடுக்கிறப்போ ' பாத்துங்க எங்க பெட்டி நசுங்குது' ன்னு கத்திக்கிட்டே அங்கே இருக்கிற போர்ட்டர் கிட்டே சண்டை போட்டு பேரம் பேசிக் கிட்டு இருப்பாங்க.

கொஞ்ச நேரம் நின்னா அவங்க பெட்டிகளை நம்மளை தூக்கச் சொல்லிருவாங்களோன்னு நம்ம அவசர அவசரமா அந்த இடத்தை விட்டு  'தப்பிச்சோம் பிழைச்சோம் ' ன்னு  ஓட வேண்டியிருக்கும்.
-------------------------------------------------------நாகேந்திர பாரதி

7 கருத்துகள்:

 1. வணக்கம்
  உண்மைதான் அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. இப்படியும் நடக்கிறது. குறிப்பாக வட இந்தியப் பயணிகள் இரண்டு பேருக்கு பத்து மூட்டை இருக்கும்.

  பதிலளிநீக்கு
 3. பழைய விளம்பரம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

  "மூட்டை முடிச்சைக் குறையுங்கள்.. வண்டிப் பயணம் சுகமாகும்.. குடும்ப அளவைக் குறையுங்கள்... வாழ்க்கைப் பயணம் சுகமாகும்... வண்டியாயினும்.... வாழ்க்கையாயினும்... சுமை குறையட்டும்... சுகம் பெருகட்டும்..."

  :)))

  பதிலளிநீக்கு
 4. உண்மைதான் ரயில் பயணத்தில் இப்படி நிறைய இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு