வியாழன், 3 செப்டம்பர், 2015

மயக்கும் மாலைப் பொழுது - நகைச்சுவைக் கட்டுரை

மயக்கும் மாலைப் பொழுது - நகைச்சுவைக் கட்டுரை 
------------------------------------------------------------------------------------------------------------------------------------
நகர்ப் புறத்திலே எத்தனையோ பொழுது போக்கு. பீச்சு, சினிமா, ஹோட்டல் ன்னுநானும் நகரத்துக்கு வந்த புதுசிலே இங்கேயெல்லாம் ரெம்ப ஆர்வத்தோடு போனேன்.

பீச்சுக்கு போனா அந்த அலைகளைப் பார்த்தா , சுனாமி ஞாபகம்தான் வர்றதுதிடீர்னு அந்த அலைகள் எல்லாம் ரெண்டு ஆளு உயரத்துக்கு  ஒசந்து ஓடி வர்ற மாதிரி ஒரு பிரமை. எதுக்கும் கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்துக்கலாம்னு இந்தப் பக்கம் வந்து மணல்லே  உட்கார்ந்தா அந்த இடத்திலேதான் யாரோ ஒடச்சிப் போட்ட கண்ணாடித் துண்டுகள் கிடக்குது. வளையலை உடைக்கிறதுக்கே கடற்கரைக்கு வர்றானுங்க போலிருக்கு . கண்ணாடி குத்தி நாம வலியிலே துடிக்கிறப்போ தான் ஒருத்தன் வந்து  'சார் சுண்டல்     வேணுமா  ' ன்னு கேட்கிறான்.

 வெறுத்துப் போய் எந்திரிச்சா பக்கத்திலே குதிரை ஒண்ணு தாறுமாறா ஓடுது. ஒரு வழியாத் தப்பிச்சு சினிமா பாக்கலாம்னு போனா அங்கே சினிமா டிக்கெட் நூறு ரூபாய்உள்ளே பாப் கான் இருநூறு ரூபாய் .பாப் கானை ஒரு பெரிய பக்கெட்டிலெ   போட்டுத் தர்றானுங்க.அதை நம்ம சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ளேயே படமே முடிஞ்சி போயிறது. படத்தை ஒழுங்கா பாக்க இன்னொரு தடவை வரணும் போல இருக்கு.

சரின்னு இன்னொரு நாள் அமைதியா உட்கார்ந்துட்டு வரலாம்னு பக்கத்திலே இருக்கிற பூங்காவுக்கு போனேன். அது என்னடான்னா பாதி விளையாட்டு மைதானமா இருக்கு. தாத்தா பாட்டி ங்க  புள்ளைங்களைக் கூட்டிட்டு வந்து சறுக்கு, ஊஞ்சல் ன்னு ரெம்ப விளையாட்டுகளை ஆட வச்சிக்கிட்டு ஒரே சத்தம்.

இது போதாதுன்னு என் பக்கத்திலே ஒரு பெரியவர் வந்து உட்கார்ந்து ' அந்தக் காலத்திலே' ன்னு ஆரம்பிச்சு ஒரு அரை மணி நேரமா ஒரே அறுவை. வீட்டிலே பேச விட மாட்டாங்க போலிருக்கு. ஒரு வழியா அவர் பெரு மூச்சு வாங்கிற அந்த நேரத்திலே தப்பிச்சு வந்துட்டேன்.

பக்கத்துக்கு ஓட்டல்லே நுழைஞ்சேன். அங்கே என்னடான்னா அந்தக் கால அரையணா சைஸிலே ஒரு வடையை வச்சிட்டு இருபது ரூபாயை வாங்கிட்டான்.

சரின்னு, வீட்டுக்கு வந்து டிவியைப் போட்டா ஒரே அழுகைச் சத்தம். எல்லாத் தொடர்களிலும் அழுகிறதை ஒரு தொழிலா செஞ்சுக் கிட்டுருந்தாங்க .

நானும் அவங்களோடு சேர்ந்து அழுது முடிச்சிட்டு ரேடியோவைப் போட்டேன். அதிலே ' மயக்கும் மாலைப் பொழுதே போ போ , இனிக்கும் இன்ப இரவே வா வா' ன்னு பாட்டுஎன்னோட மாலைப் பொழுதும் இரவுப் பொழுதும் எப்படி இருந்திச்சுன்னுதான் உங்களுக்குத் தெரியுமே .
-------------------------------------------------------நாகேந்திர பாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக