வியாழன், 15 ஜூலை, 2010

திண்ணை வீடு

திண்ணை வீடு
------------------------------
அந்த வீட்டுக்கு அடையாளமே அந்த திண்ணைதான். 'திண்ணை வீடு' என்றுதான் அந்த வீட்டுக்கே பேர்.
ஓரமாக உசந்த வேப்ப மரம் குளிர் காற்றை வீச , போக வரும் எல்லோரும் அந்த திண்ணையில் இளைப்பாறிச் செல்வது வழக்கம்.
கீரைக் காரியும், கருவாட்டுக் கூடைக் காரனும் அவ்வப்போது இறக்கி வைத்த காய்கறி, கவிச்சி நாத்தம் அங்கேயே ஒட்டிக் கொண்டு உட்கார்பவர்களின் பசியைக் கொஞ்சம் ஏற்றி விடும்.
மத்தியான நேரத்தில் வந்து படுக்கும் பாட்டிக்கு சுகமான தூக்கம் வரும். ராத்திரியில்    வீட்டுக்குள் கிடைக்காத தூக்கத்தை சரி செய்து கொள்வாள் அங்கே.
எப்போதாவது டவுனில் இருந்து வரும் பேரன் பேத்தியோடு விளையாட ஆடு புலி ஆட்டம் வரைந்த சாக்பீஸ் அடையாளமும் அழியாமல் இருக்கிறது.
மாசம்  ஒரு முறை சாணி போட்டு மொழுகும் போதுதான் அது போகும்  .
அந்த பச்சைச் சாணி மணம் பாட்டிக்கு ரெம்பவே பிடிக்கும்  .
பாட்டன் காலத்து பசுமை நினைவுகள் அந்த பச்சை மணத்தோடு ஒட்டி வருகின்றதோ என்னவோ.
ஒரு நாள் இப்படியே இருந்த பாட்டி இறந்து போனாள். அந்த திண்ணையில்  படுத்தபடியே.
இப்போது பெரும்பாலும் அந்த திண்ணையில் யாரும் உட்கார்வதோ படுப்பதோ  இல்லை.
'பெருசு அங்கேயே இருக்குது' என்ற ஒரு பீதியை யாரோ கிளப்பி விட்டு விட்டார்கள்.
வேப்ப மரம் மட்டும் அதன் குளிர்ந்த காற்றை திண்ணைக்கும், பாட்டிக்கும் வீசிக் கொண்டு இருக்கிறது.
---------------------------------------------------------------நாகேந்திர பாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக